ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் கதை

 ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் கதை:6.

காசியில் ஒரு நாள் சங்கரர் தன் சீடர்களுடன் விஸ்வநாதர், அன்னபூர்ணி கோயிலுக்கு தரிசனம் செய்ய செல்லும் வழியில், ஒரு புலையன் தன் கையில் 4 நாய்களை பிடித்தவாறே தன் மனைவி புலைச்சியுடன், அருவருக்கத்தக்க கோலத்தில் எதிரில் வர,

 அவர்களை கண்ட சங்கரரும் அவருடைய சிஷ்யர்களும், அவர்களை பார்த்து "விலகு விலகு" என்று கூறியவாறே "விலகிச்செல்ல" சொல்ல,

அதற்கு அந்த புலையன், சங்கரரை பார்த்து, "விலகு! விலகு! என்று சொல்கிறீர்களே! எதை விலகச் சொல்கிறீர்கள்! இந்த உடலையா? அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் *ஆன்மாவையா?", எதை விலகிப்போகச் சொல்கிறீர்கள்?!", என்று அழுத்தம் திருத்தமாக எதிர் கேள்வி கேட்கவும்,

தக்ஷ்ணாமூர்த்தியின் அவதாரமான சங்கரருக்கு அக்கேள்வியில் பொதிந்திருக்கும் உள்ளர்த்தம் புரிந்ததால், கேள்வி கேட்டவர் "சாமானியர் அல்ல" என்று புரிந்து, அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, "மனிஷா பஞ்சகம்" என்ற ஐந்து ஸ்லோகங்களை பாட,

அக்கணமே அந்த புலையன் - காசி விஸ்வநாதராகவும், புலைச்சி - ஜகன்மாதா விசாலாட்சியாகவும், நான்கு நாய்கள் - "ருக், யஜுர், சாம, அதர்வண -என்கிற நான்கு வேதங்களாகவும்" காட்சியளிக்க,

தன்னை பணிந்த சங்கரருக்கு "உருவு கண்டு எள்ளாமை வேண்டும், உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாதது. அஹம் ப்ரம்மாஸ்மி. அனைத்திலும் பிரம்மத்தை காணவேண்டும்.

அத்வைத தத்துவத்தை போதித்தால் மட்டும் போதாது. அக்கோட்பாட்டின் படி வாழ்ந்து காட்டவேண்டும்! என்று உபதேசம் செய்து மறைந்து போகிறார்".

சங்கரருக்கு 16 வயதாகும் போது, மிகவும் வயதான ஒரு பிராமண கிழவர் சங்கரரிடம் வாதம் செய்ய வந்தார். வாதத்தின் போது சங்கரர் தன் வாதத்திறமையால் அக்கிழவரின் வாதங்களை தவிடு பொடியாக்கினாலும்,
அவரால் அக்கிழவரை முழுமையாக வெல்லமுடியவில்லை!

நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்ததே தவிர, ஒருவரை மற்றொருவரால் வெல்ல முடியவில்லை!  இந்த சமயத்தில் சங்கரரின் சீடரான சனந்தர் என்ற பத்மபாதர்,

தன் குருவான சங்கரருடன் இப்படி சளைக்காமல் வாதம் செய்பவர் யாராயிருக்கும் !? எனக் கண்களை மூடி தியானிக்க, அவருக்கு வந்திருக்கும் வயோதிகர் வேறு யாருமில்லை! சாட்சாத் விஷ்ணுவின் அம்சமான "வேதங்களை பகுத்து தொகுத்து வழங்கிய "வியாச மகரிஷி" என்பதை உணர்ந்து அவரையும் தன் குருவையும் வணங்கிய அதே வேளையில், உண்மை உணர்ந்த சங்கரரும் அக்கிழவரை வணங்க,

சுயரூபம் காட்டிய வியாச மகரிஷி, அவர்களை ஆசிர்வதித்து, சங்கரரைப் பார்த்து, "சங்கரா! நான் சுய உருவில் வந்தால் நீ என்னோடு வாதம் செய்யமாட்டாய் என்பதை உணர்ந்தே இந்த மாறு வேடத்தில் வந்தேன். நான் எழுதிய பிரம்மசூத்திரத்திற்கு நீ எழுதிய உரை (பாஷ்யம்) மிகவும் சிறந்தது.

இந்த மனித குலம் தழைக்க உன் உபதேசம் மிகவும் முக்கியம். ஆதலால் "இன்றோடு ஆயுள் முடியும் 16 வயது பாலகனான உன் ஆயளை மேலும் 16 வருடம் நீடிக்கும் வரத்தை பிரம்மாவிடமிருந்து பெற்று வந்துள்ளேன்.

இதை பெற்றுக்கொண்டு இவ்வுலகில் பக்தி மற்றும் ஞான மார்க்கத்தை பரப்புவாயாக! " என்று ஆசி கூறி மறைந்தார்.

வளரும்.

Comments